புதன், 27 ஆகஸ்ட், 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 12




ஜீவநாடியில் வருகின்ற செய்திகள் சில நேரங்களில் ஆச்சரியப்பட

வைக்கின்றன. சித்தர்கள் மனிதர்களுக்கு உதவி புரிய ஆவலாக

உள்ளார்கள். கலியுகத்தில் கடவுளை அடைய ஆயிரம் ஆயிரம் வழிகள்

இருந்தாலும் சித்தர்கள் வழியில் அடைவதே சிறப்பான மற்றும் மிக

எளிமையான முறையாகும். ஆனால் ஜீவநாடியில் வந்து சித்தர்கள்

வாக்கு சொல்லும்போது பல நேரங்களில் அறியாமையில் உழலுகின்ற

மக்களுக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறார்கள். ஜீவநாடியை

அவதூறு பேசுகிறவர்கள் பற்றியும் குறைபட்டுக் கொள்கிறார்கள். இது

என்னமோ என்னைக் குறை சொல்வதாக கண்டிப்பாக எண்ண வேண்டாம்.


எமக்கு எந்தவித எதிர்பார்ப்பும் தேவையில்லை. ஆனால் சித்தர்களை

அவதூறு பேசுவதை மட்டும் பொறுத்துக் கொள்ள முடியாது. சித்தர்கள்

நம்மிடம் எந்தவித மரியாதையையும் எதிர்பார்க்காவிட்டாலும் நாம் நமது

கடமையைச் செவ்வனே செய்தே ஆக வேண்டும்.


ஒரு சிலர் நமக்கு உடனே நாடி கிடைக்க வேண்டும், உடனே பலன் நடக்க

வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அவ்விதம் இல்லாவிடில்

அவதூறு பேசுகிறார்கள். சித்தர்கள் அடிக்கடி வலியுறுத்தும் விஷயம்,

கலியுக மக்களை நம்பாதே என்பது தான். காரணம் ஒரு சிலர் தெரிந்தோ,

தெரியாமலோ செய்துவிடும் தவறுகள்தான். சித்தர்கள் எப்போதும்

குறை சொல்பவர்கள் அல்ல. ஆனால் அதே சமயத்தில் தவறுகளையும்

குற்றங்களையும் சுட்டிக் காட்டி நம்மை நல்வழிப்படுத்துவார்கள்.


மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்கனியும் முன்னே கசக்கும் பின்னே

இனிக்கும் என்பதுபோல் சித்தர்கள் காட்டும் நெறி ஆரம்பத்தில் சற்று

கஷ்டமாக இருந்தாலும் பின்பு சிறப்பாக இருக்கும்.


என்னிடம் அடிக்கடி ஜீவநாடி கேட்டு தற்போது ஸ்ரீ வித்யா உபாசனையை

ஜீவ நாடியில் சொல்லியபடி கடைபிடித்து வரும் நபர் ஒருவர் தனது

நண்பருக்கு நாடி படிக்க வேண்டும் என்று அடிக்கடி கேட்டு வந்தார்.

ஒரு நாள் ஒதுக்கி வாருங்கள் எனச் சொன்னேன். அவருக்கு படித்து

அவருடன் வந்த இன்னும் நான்கு நபர்களுக்குப் படித்து முடித்தும் அவர்

குறிப்பிட்டச் சொன்ன அந்த நபர் வரவில்லை. அந்த நபர் பாராளுமன்ற

தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வேட்பாளராக முயற்சி செய்து

கொண்டிருப்பதாகவும், அதைப் பற்றி கேட்கவே அவர் வருகிறார் என்றும்

இவர் சொன்னார். மதியம் 12 மணிக்கு மேல் ஆனதால் சுவடியைக் கட்டி

வைத்து விட்டு பூஜையில் வைத்த பின் பத்து நிமிடம் கழித்து வந்து

சேர்ந்தார். இதற்கு மேல் படிக்க கூடாது என்பதால் பின்பு ஒரு முறை

முயற்சி செய்யலாம் என சொல்லிவிட்டேன். வந்தவர் அரை மனதுடன்

திரும்பினார். 100 கி.மீ பயணித்து வருகிறேன் நாடி படிக்க முடியாது

என்கிறாரே என அங்கலாய்த்துக் கொண்டார். நான் ஒன்றும் அகங்காரம்

கொண்டவன் இல்லை. இறை உத்தரவை, தப்பாமல் கடைபிடிப்பவன், எனவே

நான் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, கவலைப்படவும்

கூடாது. காரணம் நாடி சொல்வது எனது தொழில் கிடையாது. மீண்டும்

அவர் பலமுறை முயற்சி செய்தார். கிடைக்கவே இல்லை. கடைசியில் அந்த

குறிப்பிட்ட கட்சி வேட்பாளரை அறிவித்தது. இவர் பெயர் அதில் இல்லை.


நாடி படித்து மட்டும் இவருக்கு சீட் கிடைக்கவா போகிறது என முருகப்

பெருமான் அவருக்கு நாடி கிடைக்கும் பாக்கியத்தைத் தரவே இல்லை. இந்த

சூட்சுமம் தெரியாமல் பலர் குழம்பி விடுகின்றனர்.

அதே நபர் மீண்டும் ஒரு நபரை அழைத்து வர நினைத்தார். அவரால் வர

முடியவில்லை என்பதால் அவர் சார்பாக இவர் கேட்கலாம் என வந்து

அமர்ந்தார். எடுத்த எடுப்பிலேயே சம்பந்தப்பட்டவர் வந்தால் உரிய பதில்

வரும் என்றார் முருகப் பெருமான். குறிப்பிட்ட அந்த நபர் துணைவேந்தர்

பதவிக்கு ஒரு குறிப்பிட்ட ஒரு பல்கலைக் கழகத்திற்காக முயற்சி

செய்வதாகச் சொன்னார்,. நாடி படிக்க முடியவில்லை. ஏதேனும் சூட்சுமம்

இருக்கும் என அவரே சொன்னார். சில நாட்கள் கழித்து துணைவேந்தரை

அரசு அறிவித்தது. இவருடைய பெயர் இல்லை. இது தான் சூட்சுமம்.

எனவே சித்தர்களின் சூட்சுமத்தையும், ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின்

திருவிளையாடல்களையும் புரிந்து கொள்ள அவர் அருள் வேண்டும்.

நாடி படிக்க தாமதம் ஆவது கூட கர்ம வினைதான் என்பதை மறந்து விடக்

கூடாது.


ஒரு தந்தையும், மகளும் நீண்ட கால முயற்சிக்குப் பிறகு ஜீவ நாடி கேட்க

வந்தனர். முருகப் பெருமான் பின் வருமாறு உரைத்தார்.

“கோள்களின் சாரமது

குணமில்லா நிலைகண்டு

குடும்பத்தில் வருகின்ற

அவமானம் தலைகுனிவு

ஒழுக்கத்தின் வழியே

ஓர் முறை சீர்கேடு

வந்து நீங்கும்

பின் வளமாகுமே!”

என வந்தது. வந்தமர்ந்திருக்கும் இருவருக்கும் பாடல் வடிவில்

சொல்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. விளக்கிச் சொல்லவும்

எனக்கு மனமில்லை. படித்தால் உங்களுக்கே விளக்கம் புரியும் என

நினைக்கிறேன். நாசூக்காக ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

இல்லாவிடில் அவமானம் வரும் என வருகிறது என்று மட்டும் சொல்லி

அனுப்பிவிட்டேன்.

அதன் பின்னர் மூன்று மாதம் கழித்து முன் அனுமதி பெறாமல் வந்தார்கள்.

உத்தரவு இல்லை என்பதால் திரும்பி விட்டார்கள். ஆறு மாதம் கழித்து

அலறியடித்துக் கொண்டு அந்த பெண்ணின் தந்தை வந்தார். ஐயா, எனது

மகளைக் காண வில்லை. நீங்கள் தான் ஏதேனும் வழி காட்ட வேண்டும்

என்றார். சரி ஏற்கனவே முருகப் பெருமான் என்ன உரைத்தாரோ அதுதான்

நடந்திருக்கும் என நினைத்து சுவடியைப் பூஜித்து பிரித்தேன்.

“காதலில்லை காமமில்லை

கோட்சார நிலை நலமில்லை

படிதாண்டினாள் ஆனாலும்

பத்தினிதான் பயமில்லை

சென்றழைத்தால் வரமாட்டாள்

அரவு திசை என்பதால்

புற்று மண் கொண்டு போ

புதுமையாய் வசமாவாள்

சேரவனம் சென்று

சேராமல் ஒரு மண்டலம்

தங்கவை தரமாகும்.

இந்தப் பெண் வீட்டை விட்டுச் சென்றது உண்மைதான். ஆனால் அது

காதலினால் அல்ல. காமத்தினாலும் அல்ல. கோட்சார கிரகநிலை

சரியில்லை நேரம் சரியில்லாததால் தான் இவ்விதம் நடந்திருக்கிறது.

வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாலும் அவள் கற்பிக்கு ஏதும்

பங்கமில்லை. பத்தினிதான் பயப்பட வேண்டாம். இராகு திசை நடப்பதால்

பாம்பு குடியிருக்கும் புற்று மண்ணைக் கொண்டு போய் கூப்பிடு

வந்திடுவாள். சாதரணமாக சென்றழைத்தால் வர மாட்டாள். புற்று

மண்ணிற்கு வசீகர சக்தி உண்டு. வந்திடுவாள். வந்தாலும் சேரவனம்

என்றழைக்கப்படும் மலையாள தேசம் கேரளாவில் தனியாக ஒரு மண்டலம்

தங்க வைத்துவிட்டால் எல்லாமே சரியாகும் என நீண்ட விளக்க உரையை

உரைத்தார் முருகப்பெருமான்.

                                      ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும்.

1 கருத்து: